Wednesday, May 20, 2009

திருப்புகழ்ப் பாராயண குண்டு

ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் அநுக்ரஹித்த
திருப்புகழ்ப் பாராயண குண்டு

முகவுரை

பெருத்த பாருளீர்
இத் திருப்புகழ்ப் பாராயண குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர்குண்டு என்றும், சூர ஸம்ஹார காலத்திலும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது –
கஜரத பதாகினி யரக்கர் துணி பட்டுவிழு
களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன
கடிய குணத்த சினத்த சகத்ர யோசனை
நெடிய கழுத்த சுழித்த விழித்த பாரவைய
காத நூறாயிர கோடி வளைந்தன
பூதவே தாளம் அநேகவிதங்களே
எனவரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால் போர்க்களத்தும் மற்றெவ்விடத்தும் இறைவன் திருப்புகழை யோதி எளிதிற் சுகம் பெறலாம் என்றும், திடபுத்தியுடன் நித்திய பாராயணஞ் செய்து இத்திருப்புகழ் குண்டின் ஆற்றலையும் பிரபாவத்தையும் அநுபவத்திற் காணுங்கள் என்றும்-எமது ஆசான் திருப்புகழ்ச் சுவாமிகள் திடம்பட உரைக்கிறார். ஆதலால் இதை உய்ம்மிங்கள்; உண்மை அறிமிங்கள்.
இந்நூலை வெளியிட உதவி புரிந்த உயர் திருவாளர், ராவ் பஹதூர் வ.சு.செங்கல்வராய பிள்ளை, எம்.ஏ., அவர்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல கந்தக் கடவுளைப் பிரார்த்திக்கின்றனன்.
திருப்புகழடிமை கா.ரா.முருகேசம் பிள்ளை
சென்னை
6-1-1942

குறிப்பு: இந்த பாராயணக் குண்டு எத்தகைய இடர்களையும் நீக்க வல்லது என்பது சொல்லாமலே விளங்குமாதலின் இது சம்பந்தப் பெருமானுடைய கோளறு பதிகம் போல நித்ய பாராயணத்துக்குத் தகுதியான நூல்.



கணபதி துணை
திருத்தணிகேசன் துணை
ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் அநுக்ரஹித்த
திருப்புகழ்ப் பாராயண குண்டு

பாடும் பணிபெற
ஆடும் பரிவேல் அணிசேவ லெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியானை சகோதரனே

உயிர்க்கு ஆதரவு
உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள் கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே

எழுந்தருள வேண்டுதல்
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்

கோள்கள் ஒடுங்க
நாளென் செயும்வினை தான் என்செயும் எனைநாடிவந்த
கோள் என் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

திருப்புகழ் நெருப்பு
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவ ருயிர்க்கும் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசிக்கரு அறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும்
நிறைப்புகழ் உரைக்கும் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுததந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துடன் நடக்குங் கொடுசூரர்
சினத்தயும் உடற்சங் கரித்தமலை முற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே

தரிசனப் பாடல்
ஓலையுந் தூதருங் கண்டு திண்டாடல் ஒழித்தெனக்குக்
காலையு மாலையு முன்னிற்குமே! கந்த வேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்த செச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே

வேலும் மயிலும் துணை
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள், முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே

வேலின் பிரபாவங்கூறி பகைவரை வெல்ல வேல் வகுப்பு
பருத்தமுலை சிறுத்த இடை வெளூத்த நகை
கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும்
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுனை தெறிக்கவர மாகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்து வழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும்
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும் விதி
தனக்குஅரி தனக்குநரர் தமக்கும் உறும் இடுக்கண்வினை சாடும்
சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கொர் துணை யாகும்
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழு மறத்தைநிலை காணும்
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்கு நிகர் ஆகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்
தனித்துவழி நடக்குமென திடத்தும்ஒரு
வலத்தும் இருபுறத்தும் அருகடுத் திரவு பகற்றுணையதாகும்
சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
திரைக்கடலை உடைத்து நிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்து திரம் நிறைத்து விளையாடும்
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்க அற விசைத்த திர ஓடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என துளத்தில் உறை கருத்தன்மயில்
நடத்து குகன் வேலே

வேல் துணை
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்தது சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே

வேல்வாங்கு வகுப்பு
திடவிய நெஞ்சுடை அடியர் இடும்பை கெடும்படி
தீயாங் குறை போய் ஆழ்ந்தது
செய செய என்றிசை பரவிய எங்கள் கொடுங்கலி
தேசாந்தரமே சாய்ந்தது
செயல்உரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர்
தீமான்கதர் தாம் ஏங்கினர்
சிகர தரங்கித மகரமும் நெருங்கு பெருங்கடல்
தீமுண்டுதன் வாய் மாண்டது
தெரியலர் சென்றடை திசைகளில் எண்கிரி சிம்பெழ
மாறாங்கிரி நூறாந் தொளை
சிகர நெடுங்கிரி குகைகள் திறந்து திகந்தமும்
லோகாந்தமும் நீர் தேங்கின
சிறையுள் அழுந்திய குறைகளொழிந்து செயங்கொடு
தேவேந்திரர் சேணஆண்டவர்
திரிபுவ னங்களும் ஒருபயம் இன்றி வளங்கெழு
சீர்பூண்டற நேர் பூண்டன
விடவசனஞ்சில பறையும் விரிஞ்சன் விலங்கது
கால்பூண்டுதன் மேல்தீர்ந்தனன்
விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்தெழில்
வீவான் பொழில் பூவாய்ந்தது
விழைவு தரும்பத சசிதன் விளங்கிய மங்கல
நூல்வாங்கிலாள் வாழ்ந்தனள்
வெருவி யொதுங்கிமை யவரெவருஞ் சிறைவென்றித
மேலாம்படி யேமீண்டனர்
விழியொ ரிரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன்
மேல்வாங்கிளை கால்சாய்ந்தது
வெளிமுழுதுந் திசை முழுதும் விழுங்கி எழுங்கன
சூர்மாண்டற வேர்மாய்ந்தது
விபுதர் பயங்கெட நிருதர் தளங்கெட விண் கெடு
மேடாம்படி பாடோங்கின
மிடைகுறள் வெங்கொடி கழுகு பருந்து விருந்தென
ஊன் ஆர்ந்தகல் வானார்ந்தன
அடவி படுஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பணி
யாமாங்கதர் வாமாங்கினை
அனுபவை அம்பிகை அநுதிதை அம்பை த்ரியம்பகி
ஆசாம்பரை பாசாங்குசை
அநகை யசஞ்சலை அதிகுணசுந்தரி அந்தரி
காலாந்தகி மேலாந்திரு
அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி
மான் ஆம்கணி ஞானாங்குரை
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்த விளைந்தழல்
வாய் கான்றிடு நாகாங்கதை
அபய வரம்புரி உபயகரம்திகழ் அந்தணி
ஆமங்கறி தாய் மாண்பினள்
அதுலை தருந்திரு மதலை இபங்கொள் பயங்கொடு
பாய்மாண்கலை வாய்மாண்புன
அணிகுற தருந்திரு மதலை இபங்கொள் பயங்கொடு
பாய்மாண்கலை வாய்மாண்புன
அணிகுற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர
ராசாங்கம தாராய்ந்தவன்
வடவை யிடும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய
மாடாம்புடை நாடாண்டகை
வசைகரு துங்குரு பதியொடு தம்பிய ரும்பட
வேபாண்டவர் தேர் ஊர்ந்தவன்
வளவில் வளர்ந்திடை மகளிர் குவிந்து தடங்குடை
வார்பூந்துகில் வார் பூம்புயல்
வரைநிரை கன்றின முழுது மயங்கிய பண்கெழு
வேயேந்திய வாயான் கழல்
மருதிடை சென்றுயர் சகடு தடிந்தடர் வெம்பளை
வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன்
மதசயி லம்பொர வரவிடு நெஞ்சினில் வஞ்சக
மாமான்பகை கோமான்திரு
மருகன் நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி
வாகாம்பரை தோய்காங்கெயன்
மகபதி தன்பதி பகைகிழி யும்படி அன்றடல்
வாளோங்கிய வேல் வாங்கவே

பிரார்த்தனைப் பா அடிகள்
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்
என்றன் உள்ளத் துயரை ஒழித்தருள்வாய்

அஞ்சாநெஞ் சாக்கந் தரவல பெருமாளே

ஆபத்தில் அஞ்சேல் என்ற பெருமாளே

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே

ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா எனஓ தருள்தாராய்

தவர்வாட் டோதரசூலந் தரியாக் காதியசூருந்
தணியாச் சாகரம் ஏழுங் கிரியேழுஞ்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிகூத் தாடிய மாவுந் தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டானொரு தேனும்
துணையாய்த் தாழ்வற வாழும் பெரியோனெ
துணையாய்க் காவல் செய்வாய்

வேலுமயிலு நினைந்தவர் தந்துயர்
தீர அருள்தரு கந்த

பதினா லுலகத்தினில் உற்றுறு பக்தர்கள்
ஏது நினைத்தது மெத்த அளித்தருள் இளையோனே

மொழியும் அடியார்கள் கோடி குறைகருதினாலும் வேறு
முனிய அறியாத தேவர் பெருமாளே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்ட வெறாதுதவு பெருமாளே

வேலெடுத்த சமர்த்தை யுரைப்பவர்
ஏவருக்கு மனத்தில் நினைப்பவை யருள்வோனே

அடியவர் இச்சையில் எவை எவை யுற்றன
அவைதரு வித்தருள் பெருமாளே

நவக்ரஹ சேஷ்டை நீங்க
சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்த வென்னிற்
சேயவன் புந்தி பனிப்பாநு வெள்ளிபொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே

மயில் துணை
குசைநெகி ழாவெற்றி வேலோன் அவுணர்குடர்குழம்பச்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்(து)
அசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிட எண்
திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே

சேவல் துணை
படைபட்ட வேலவன் பால் வந்த வாகைப் பதாகை என்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்(து)
உடைபட்ட தண்ட கடாகம் உத்ர்ந்த துடு படலம்
இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே

மனக்கவலை நீங்க
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே

அச்சமற்ற வாழ்வுற
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்த துணை
கிரணக் கலாபியும் வேலுமுண்டே கிண்கிணி முகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்து ரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே

தாழ்வின்றி வாழ
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொருதாழ்வில்லையே
நாம விசேடப் பலன்
முடியாப் பிறவிக் கடலிற் புகார் முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார் வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே

திடங் கூறுதல்
சலங்காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழி யணுகார் துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்றுள் ஒருகவி தான்கற் றறிந்தவரே

மடங்கல் நடுங்குந் தனைச்சுடும் ஈதென்று மாதிரத்தோர்
அடங்கி நடுங்குவர் சூலா யுதமென் றசுரர்கடல்
ஒடுங்கி நடுங்குவர் வேலாயுதமென் றுரகனுங்கீழ்க்
கிடங்கில் நடுங்கும் மயிலோன் திருப்புகழ் கேட்டளவே

திருப்புகழ் ஆற்றல்
வேலவன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீல மேத்திய சித்தப்ர சித்தரே

கருப்புகழாம் பிறசமயக் கதைகேளா தநுதினமுன்
திருப்புகழை உரைப்போர்க்குச் சித்தியெட்டும் எளிதாமே
(தணிகைக் கலம்பகம்)

வாழ்த்து
ஏகாந்த வீரம் போற்றி
நீலாங்க யானம் போற்றி
ஏடார்ந்த நீபம் போற்றி முகில்தாவி

ஏறோங்க லேழுஞ் சாய்த்த
நான் மூன்று தோளும் போற்றி
யார் வேண்டி னாலுங் கேட்ட பொருள் ஈயும்
த்யாகாங்க சீலம் போற்றி

திக் பந்தனம்
தடக்கொற்ற வேன்மயிலே! இடர்தீரத் தனிவிடில் நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்து நின் தோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனக சக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே

வேலும் மயிலும் துணை
சுபம்

No comments:

Post a Comment